
கலைஞர்

தமிழ்நாட்டின் இன்றைய திருவாரூர் மாவட்டத்தின் திருக்குவளை கிராமத்தில் 1924-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் மூன்றாம் நாள் முத்துவேலர்-அஞ்சுகம் தம்பதியரின் மூன்றாம் மகவாய் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தார்.
பள்ளிக் கல்வி மட்டுமே பயின்ற அவர், தனது திறமையாலும், அயராத உழைப்பாலும், சுயகல்வியாலும், கூர்ந்த மதிநுட்பத்தாலும், தொடர்ச்சியான புத்தக வாசிப்பாலும் மாபெரும் கலை இலக்கிய ஆளுமையாக, இதழாளராக, எழுத்தாளராக, அரசியல்வாதியாக, சமரசமற்ற மக்கள் தலைவராக பரிணமித்தார்.


வாழ்க்கைப் பயணம்

கலைஞரின் இளமைக்காலம்
திருக்குவளையிலும் பின்னர் திருவாரூரிலும் தனது பள்ளிப்படிப்பைத் தொடர்ந்த கலைஞரை, சமகால அரசியல் சூழலும் திராவிட இயக்கத் தலைவர்களுடனான தொடர்பும் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தி, தமிழ், தமிழர் நலம், சமூகநீதி போன்ற களங்களில் கலை, இலக்கிய, அரசியல் செயல்பாடுகள் மூலம் சமர் புரிய மடைமாற்றின.

எழுத்தாளர் – கலைஞர்
தன்முனைப்பில் ‘மாணவநேசன்‘, ‘முரசொலி‘ போன்ற கையெழுத்துப் பிரதிகள் வெளியிட்ட காலம்தொட்டு, ஈரோட்டில் பெரியாரின் மாணவராய் ‘குடிஅரசு‘ இதழின் துணை ஆசிரியராகப் பாடம் பயின்ற நாட்கள் ஊடாக, ‘உடன்பிறப்பே‘ என்னும் மந்திரச்சொல்லில் இலட்சக்கணக்கான தொண்டர்களைத் தன்வயப்படுத்திய காலம்வரை இரண்டு இலட்சம் பக்கங்களுக்கும் மேலாக எழுதியுள்ள இதழாளர் - எழுத்தாளர்.

அரசியல் பயணம்
தமிழ்நாட்டின் நீண்டகால முதலமைச்சர் தொடர்ச்சியாக அறுபது ஆண்டுகள் மக்கள் பிரதிநிதி, ஆற்றல்மிகு எதிர்க்கட்சித் தலைவர், ஆண்டாண்டுகால பழமைவாதத்திற்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிரான, புரட்சிகர சமத்துவத்திற்கு வித்திடும் திராவிடக் கருத்தியல் கோட்பாடுகளை ஒரு சனநாயக நாட்டில் நடைமுறைக்குக் கொண்டுவர இயலும் என்பதைச் சாதித்துக்காட்டிய ஒரு திராவிட இயக்கப் பேராளுமை, கருத்தியல் பின்புலம் கொண்ட மிகப்பெரிய அரசியல்கட்சி ஒன்றின் நாற்பத்தொன்பது ஆண்டுகாலத் தலைவர் என அரசியல் களத்தில் அவர் சாதித்தது உச்சம்.

கலைத் துறை
தூக்குமேடை போன்ற மேடை நாடகம் என்றாலும், பராசக்தி, மனோகரா போன்ற திரைப்படங்கள் என்றாலும் தேன் தடவி புரட்சிகரக் கருத்துகளை மக்களுக்கு எளிமையாகச் சொல்லும் திரைமொழி அறிந்த வித்தகர்

சமூக நீதி
தனது இளமைக் காலங்களில் சமூகம் கற்பித்த ஏற்றத்தாழ்வுகளை மனதிற்கொண்டு, தனது பன்முகச் செயல்பாடுகள் அனைத்தையும் சமூக நீதி என ஒற்றை முனைநோக்கி முடுக்கிவிட்டு, சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய அணையாது ஒளிர்ந்த பெருநெருப்பு!

மகளிர் நலன்
பெண்களின் கல்வி, திருமணம், மகப்பேறு, அரசியல் பங்களிப்பு, சமூகப் பங்களிப்பு என திராவிட இயக்கத்தின் அடிநாதமாகிய பெண் விடுதலைக் கோட்பாட்டினைச் சட்டமியற்றிச் செயலாற்றிக் காட்டிய சாதனையாளர்


டாக்டர் . மு. கருணாநிதி


எமது முன்னணிச் செய்திகளைக் காண

குழு
முகநூல்
வலைஒளி
